
RM120 ரொட்டி சானாய் விவகாரம்: தவறான புரிதலால் ஏற்பட்டது
சிரம்பான், பிப்ரவரி 20 –
சிரம்பான் டாத்தாரான் சென்ட்ரியோவிலுள்ள (Dataran Centrio) நாசி கண்டார் உணவகம், ரொட்டி சானாய்க்காக 120 ரிங்கிட் வசூலித்ததென வெளியான காணொளி தொடர்பான விவகாரம், உண்மையில் தவறான புரிதலால் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ விசாரணையில் தெரியவந்துள்ளது.
உணவக பிரதிநிதி கூறுகையில், வாடிக்கையாளர் ரொட்டி சானாயை பொட்டலம் கட்டி கொண்டதுடன், வெளியே இருந்த மேசைகளில் அவரது பணியாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். “அனைத்து மேசைகளின் கட்டணத்தையும் கணக்கிடுங்கள்” என்று கேட்டதாக புரிந்துகொள்ளப்பட்டதால், அங்கு இருந்த ஏழு மேசைகளின் மொத்த தொகை 120 ரிங்கிட் என கணக்கிடப்பட்டது.
வாடிக்கையாளர் 150 ரிங்கிட் வழங்க, மீதம் 30 ரிங்கிட் மற்றும் ரசீது வழங்கப்பட்டது. பின்னர் இரண்டு மேசைகளுக்கான கட்டணம் மட்டும் மீண்டும் கணக்கிடுமாறு கேட்டபோது, தொகை சுமார் 70 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டதால் அதிகமாக செலுத்திய பணம் திருப்பி வழங்கப்பட்டது.
கவுண்டரில் பணியாற்றிய வெளிநாட்டு ஊழியருடன் ஏற்பட்ட தகவல் தொடர்பு பிழை காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார். 2019 முதல் செயல்பட்டு வரும் உணவகத்தில் இதுபோன்ற சம்பவம் முன்பு ஏற்படவில்லை என்றும் கூறினார்.
நெகிரி செம்பிலான் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்கைச் செலவீன அமைச்சான KPDN நடத்திய ஆய்வில், உணவகத்தின் உணவு பட்டியலின் விலை மற்றும் கவுண்டர் கணினியிலிருக்கும் விலை ஒரே மாதிரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் இதுவரை அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை.
வீடியோ வைரலால் வணிகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க உணவகம் பரிசீலித்து வருகிறது.



