
சென்னை, நவம்பர்-5 – அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் வெற்றிப் பெற வேண்டி, தமிழகத்தின் திருவாரூரில் அவரின் மூதாதையர்கள் வாழ்ந்ததாக அறியப்படும் கிராமத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
கமலா ஹாரீஸின் தாயார் வழி தாத்தா பி.வி.கோபாலன் வாழ்ந்த துளசேந்திரபுரம் கிராமம் தான், அவரின் வெற்றியைக் காண பெரும் ஆர்வத்தோடு உள்ளது.
மலேசிய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு மேல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கும் நிலையில், இன்று காலையே துளசேந்திரபுரத்தில் கமலாவுக்கு பிராத்தனை நடத்தப்பட்டது.
அங்குள்ள அவரது குல தெய்வக் கோயிலில் கிராம மக்களுடன் சில வெளிநாட்டவர்களும் அந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
கோயிலுக்கு வெளியே, கிராம மக்கள் கமலா ஹாரிஸுக்கு பதாகை வைத்து, அதில் ‘ மண்ணின் தவப்புதல்வி’ வெற்றிப் பெற வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த துளசேந்திரபுரம், 2020-ல் கமலா ஹாரீஸ் அமெரிக்கத் துணையதிபராகப் பதவியேற்றப் போது முதன் முறையாக உலக கவனத்தை ஈர்த்திருந்தது.
ஜமைக்கா நாட்டவருக்கும் இந்திய தாய்க்கும் பிறந்தவரான கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றிப் பெற்றால், துளசேந்திரபுரத்தில் கொண்டாட்டம் களைக் கட்டுமென்பதில் ஐயமில்லை.
எனினும், அதற்கு முன்பாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டோனல்ட் ட்டிரம்பின் சவாலை கமலா இன்று முறியடித்தாக வேண்டும்.