
செப்பாங், ஆகஸ்ட்-21 – RM400,000 ரிங்கிட் இலஞ்சம் வாங்கிக் கொண்டு வெளிநாட்டினரை முறைப்படி சோதனைக்கு உட்படுத்தாமல் நாட்டுக்குள் அனுமதித்த சந்தேகத்தில், குடிநுழைவுத் துறையின் இரு மூத்த அதிகாரிகள் கைதாகியுள்ளனர்.
KLIA-வில் மணிபுரியும் 40 வயதிலான அவ்விருவரும் நீலாய் மற்றும் ஜோகூர் பாருவில் திங்கட்கிழமை ஏக காலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்ததோடு, சில வங்கிக் கணக்குகளையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC முடக்கியுள்ளது.
விசாரணைக்காக இருவரும் ஆகஸ்ட் 26 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
KLIA 1, KLIA 2 முனையங்களில் counter setting முறையில் இலஞ்சம் வாங்கி கடமைத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக முன்னதாக MACC மேற்கொண்ட சோதனைகளின் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
2022 முதல் 2024 வரை ஏராளமான வெளிநாட்டவர்களை சோதனைக்கு உட்படுத்தாமல் நாட்டுக்குள் அனுமதிக்க, இந்த counter setting முறையில் அதிகாரிகளுக்கு இலட்சக் கணக்கான ரிங்கிட் கைமாறியிருப்பதாக MACC கூறியது.