Latestமலேசியா

RM6000 கடன் RM40000 ஆக உயர்வு; கடன் வசூல் மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண்

கோலாலம்பூர், ஜூலை 6 – பழைய கடன் அட்டை நிலுவைத் தொகைக்காக 40,000 ரிங்கிட் பணத்தைச் செலுத்துமாறு கடன் வசூல் நிறுவனத்தால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருவதாக, பெண்ணொருவர் கூறியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு அவரது கடன் அட்டையில் இருந்த நிலுவைத் தொகை 6,000 ரிங்கிட் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், 2020ஆம் ஆண்டு அந்தக் கணக்கை வங்கி கடன் வசூல் நிறுவனத்துக்கு விற்றுவிட்டதாகக் கூறி, வட்டியுடன் சேர்த்து 40,000 ரிங்கிட் கோரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கடனைச் செலுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுத்து பெரிய பிரச்சினையில் சிக்க வைப்பதாக மிரட்டியுள்ளனர். அதே நேரத்தில் வீட்டிற்கே வந்து நோட்டீஸ் கொடுத்துச் சென்றதால் அச்சமடைந்த அப்பெண், போலீசிலும் புகார் அளித்துள்ளார். பயத்தின் காரணமாக 7,000 ரிங்கிட்டுக்கும் மேல் தவணை முறையில் பணம் செலுத்தியபோதும், தொலைபேசி மூலம் தொல்லை தொடர்ந்ததாக அவர் கூறினார்.

பின்னர், அந்தக் கடன் ஆறு ஆண்டுகளைக் கடந்த காலாவதியான (time-barred) கடன் என்பதால் சட்டப்படி அதைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்காமல் இருக்கலாம் என்பதை அறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடன் வசூல் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து, கடன் வாங்கியவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!