
கோலாலம்பூர், ஏப்ரல்-10-நேற்று பல பெட்ரோல் நிலையங்களில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் போனதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, எரிபொருள் பற்றாக்குறையை சரிசெய்வதில் Shell நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது.
அதிகப்படியான தேவை மற்றும் விநியோகத் தாமதம் காரணமாக நேற்றையச் சிக்கல் ஏற்பட்டதாக Shell விளக்கமளித்தது.
நிலையை அணுக்கமாகக் கண்காணித்து, எரிபொருள் விநியோகத்தை மீண்டும் சீர்படுத்த தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக அறிக்கை வாயிலாக Shell கூறியது.
பினாங்கில் நேற்று பல Shell நிலையங்களில் எரிபொருள் கிடைக்கவில்லை என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN முன்னதாகக் கூறியிருந்தது.
மேற்காசிய நெருக்கடியால் உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும், BUDI95 மானியத் திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோலை லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையிலேயே அரசாங்கம் வழங்கி வருகிறது.
எனினும், மேற்கு மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு RM6.72-ழாக உயர்ந்துள்ளது.



