
RON95 வாங்க வெளிநாட்டு கடன் அட்டைகளுக்கு தடை: KPDN ஆய்வு
கோலாலம்பூர், பிப்ரவரி 9
மலேசியாவில் RON95 மானிய பெட்ரோலை வாங்குவதற்கு வெளிநாட்டு கடன் அட்டைகளை பயன்படுத்துவதைத் தடுக்க, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்கைச் செலவீன அமைச்சான KPDN புதிய நடைமுறைகளை ஆய்வு செய்து வருகிறது.
RON95 மானியம் தகுதியுள்ள மலேசியர்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அமைச்சர் Datuk Armizan Mohd Ali தெரிவித்தார்.
இதற்காக, வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் RON95 மானிய பெட்ரோலை வாங்குவதைத் தடை செய்யும் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த விதிமுறைகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அவர் கூறினார்.
அதே நேரத்தில், அரசு பெட்ரோல் மானியத்தைத் தவறான வழியில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு Ops Samar நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், சந்தேகிக்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் வணிக விதிமீறல்கள் தொடர்பாக கடந்த ஆண்டு 1,006 இணையதளங்களுக்கு அணுகல் தடை விதிக்கப்பட்டதாகவும், 695 ஆன்லைன் விளம்பரங்கள் அகற்றப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் KPDN, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் இணைந்து மேற்கொண்டதாக அவர் கூறினார்.



