
கோலாம்பூர், அக் 28 –
தற்போது சீ போட்டி எனப்படும் சியாப் போட்டி 1971ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்றபோது ஒட்டப்பந்தயம், மற்றும் Pentathlon (பெண்டாத்லான் ) பிரிவில் வென்ற தங்கப் பதக்கம் மற்றும் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வென்ற வெள்ளிப் பதக்கமும் காணாமல்போன 54 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அசல் பதக்கங்களுக்கு பதிலாக மாற்றுப் பதக்கங்கள் கிடைத்தது குறித்து மலேசிய முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனையான P. சாவித்திரி நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
அந்த வெற்றிப் பதக்கங்களை கண்காட்சியில் வைப்பதற்காக அதிகாரிகள் இரவலாக பெற்றுச் சென்றனர். அதன் பிறகு அந்த பதக்கங்கள் திரும்ப கிடைக்காமல் சாவித்திரி பெரும் வேதனையில் இருந்தார்.
அவரது இந்த வேதனையை அண்மையில் தெ ஸ்டார் தினசரி செய்தியாக வெளியிட்டதை தொடர்ந்து மலேசிய அமெச்சூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைமைச் செயலாளர் நூர்ஹயாத்தி கரிம் காணாமல் போன அந்த பதக்கங்கள் குறித்து சாவித்திரியை நேரடியாக சந்தித்து விளக்கம் பெற்றாதோடு அச்சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்த நுர்ஹயாத்தி காணாமல்போன பதக்கங்களுக்கு பதில் அதே மாதிரியான இரண்டு பதக்கங்கள் வழங்கப்படும் என சாவித்திரியிடம் உறுதியளித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ நோர்ஷா ஷக்கரியா 84 வயதுடைய சாவித்திரியிடம் இரு பதக்கங்களை வழங்கினார்.
தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெறுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம், அவை நான் ஒருபோதும் பார்க்காத அசல் பதக்கங்களின் பிரதிகள்தான் என்று சாவித்திரி கூறினார்.
நுர்ஹயாத்திக்கு தாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளதோடு 54 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசிய அமெச்சூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் கரிம் இப்ராஹிம், முன்னாள் தேசிய ஓட்டப்பந்த வீராங்கனை டத்தோ எம்.ராஜமணி மற்றும் டேனி ஸ்ரீதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



