
கோலாலம்பூர், செப்டம்பர்-20,
Sin Chew Daily மற்றும் Sinar Harian நாளிதழ்கள் மீது விதிக்கப்பட்ட 1 லட்சம் ரிங்கிட் அபராதம், ஊடகங்களுக்கு எதிரான அநீதியான அழுத்தமாகும் என்று பாஸ் கட்சி சாடியுள்ளது.
டிஜிட்டல் பதிப்பில் முழுமையற்ற தேசியக் கொடியை வெளியிட்டதற்காக Sin Chew Daily-க்கும், இன்ஸ்டகிராமில் தேசியப் போலீஸ் படைத் தலைவரை தவறாக ஒரு கட்சியுடன் இணைத்து செய்தி வெளியிட்டதற்காக Sinar Harian-னுக்கும் அந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விரண்டு ஊடகங்களும் ஏற்கனவே தங்கள் தவறுகளைச் சரிசெய்து மன்னிப்பு கேட்டுள்ளன.
பத்திரிகை உலகில் இது தானாகவே நம்பகத்தன்மைக்கு பெரிய தண்டனையாகும் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் சுட்டிக் காட்டினார்.
அவ்வகையில் தொடர்ச்சியான மீறல்களே கடுமையான நடவடிக்கைக்கு உரியதாக இருக்கும் என்றார் அவர்.
தேசிய நீரோட்டத்தில் நீண்ட காலமாகச் செயல்படும் முக்கிய ஊடகங்கள், சரியான நடவடிக்கை எடுக்கக்கூடிய பக்குவத்தைக் கொண்டுள்ளன.
எனவே மலேசிய ஊடக மன்றத்தின் பங்கு மதிக்கப்பட வேண்டும் என்றும், அதிகப்படியான அபராதங்கள் ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான தாக்கியுடின் எச்சரித்தார்.
அந்த அபராதங்கள் அளவுக்கு மீறியதும், சமநிலையற்றதுமாக இருப்பதாக, மலேசிய ஊடக மன்றமும் முன்னதாக கவலைத் தெரிவித்திருந்தது.
இவ்வளவு பெரிய அபராதங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதோடு சுயத் தணிக்கைக்கும் இட்டுச் செல்லும்…
இது, பொது மக்களுக்கு தகவல் வழங்குவது மற்றும் அதிகாரத்திலிருப்பவர்களைக் கண்காணிப்பது போன்ற
ஊடகத்தின் அடிப்படைப் பொறுப்புகளை பலவீனப்படுத்தும் என அது சுட்டிக் காட்டியது.