
புத்ராஜெயா, ஏப்ரல்-24- 2024 SPM தேர்வில் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ நிலையில் தேர்ச்சிப் பெற்றிருக்கின்றனர்.
A+, A, A- ஆகிய தேர்ச்சியை அது உள்ளடக்கியது என கல்வித் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னான் இன்று புத்ராஜெயாவில் அறிவித்தார்.
முந்தைய ஆண்டில் 11,713 பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் A பெற்றிருந்தனர்.
இவ்வேளையில் 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகச் சிறந்த அடைவுநிலையாகவும், இந்த 2024 SPM தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன.
GPN எனப்படும் தேசிய சராசரி தேர்ச்சி விகிதம் 4.49-தாக பதிவாகியுள்ளது; இதுவே முந்தைய ஆண்டில் அது 4.6-ராக பதிவாகியிருந்தது.
குறைவான GPN விகிதமானது, சிறந்த அடைவுநிலையைக் குறிக்கும்.
அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது ‘C’ தேர்ச்சி நிலையைப் பதிவுச் செய்த மாணவர்களின் எண்ணிக்கையும் ஏற்றம் கண்டுள்ளது.
2023-ல் 83,112 பேராக இருந்த அவ்வெண்ணிக்கை 86,040 பேராக உயர்ந்துள்ளது.
136,791 மாணவர்கள் அல்லது 36.1 விழுக்காட்டினர் அனைத்துப் பாடங்களிலும் குறைந்த பட்ச தேர்ச்சியைப் பதிவுச் செய்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட 5,302 பேர் அதிகமாகும்.
தேர்வெழுதிய மொத்த மாணவர்களில் 94 விழுக்காட்டினர் அல்லது 355,933 பேர் SPM சான்றிதழைப் பெற தகுதிப் பெற்றுள்ளதாகவும் அஸ்மான் அறிவித்தார்.