
பேங்கோக் – ஜூலை-25 – அண்டை நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையில் மோதல் வெடித்து போர்ச்சூழல் அபாயம் உருவாகியிப்பது உலகநாடுகளை கவலையடைச் செய்துள்ளது.
இவ்விரு நாடுகளுக்கான எல்லைச் சண்டையில் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அவையிரண்டும் ‘அடித்துக் கொள்வது’ உண்மையில் ஓர் இந்துக் கோயிலுக்காகவே என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கிலிருந்து 360 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பிரசாத் தா மோன் தோம் (Prasat Ta Muen Thom) என்ற புராதன இந்துக் கோயிலே இப்பிரச்னைக்கு ‘மூலக்காரணமாம்’.
11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அந்த இந்துக் கோயிலை கம்போடியா சொந்தம் கொண்டாடுகிறது; ஆனால் தாய்லாந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்விவகாரம் ஏற்கனவே அனைத்துலக நீதிமன்றம் வரை சென்று கம்போடியாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பும் வந்துவிட்டது.
தாய்லாந்து அம்முடிவை ஏற்றுக் கொண்ட போதும், அக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் தொடர்பில் இன்னமும் உரிமைப் பிரச்னை நீடிக்கிறது.
ஐநாவின் UNESCO அமைப்பின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அக்கோயிலை அறிவிக்குமாறு 2008-ஆம் ஆண்டு கம்போடியா முயன்ற போதே தாய்லாந்தில் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் புத்த மதத்தை அனுசரிக்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு இந்துக் கோயில் காரணமாக இருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்போடியாவில் கலாச்சாரம், கட்டடக் கலை, சமூக வாழ்வு மற்றும் இலக்கியத்தில் இந்து தாக்கம் அதிகம் காணப்படுவது தெரிந்ததே. அங்கோர் வாட் பிரமாண்ட கோயிலே அதற்கு தக்கச் சான்றாகும்.