
கோலாலாம்பூர், செப்டம்பர்-10 – WSC எனப்படும் உலக அறிஞர் கிண்ணம் என்பது அனைத்துலக அளவிலான வருடாந்திர கல்வித் திட்டமாகும்.
ஒவ்வோர் ஆண்டும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
மாணவர்களுக்கு சுவாரஸ்யமான, பள்ளியில் கற்பிக்கப்படாத பாடங்களைக் கற்பிப்பதையும், வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களிடையே பொதுவான நிலையைக் கண்டறிவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல கட்டங்களை உட்படுத்திய இப்போட்டியில் பேராக் தைப்பிங்கில் பிறந்தவரான ரீமாஷினி மோகன்ராஜ் எனும் மாணவி அதன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து பெருமைத் தேடித் தந்துள்ளார்.
தந்தையின் தொழில் காரணமாக இவரின் குடும்பத்தார் இந்தோனேசியாவில் குடியேறி சுமார் 20 ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகின்றனர்.
ஜகார்த்தாவில் உள்ள Bina Tunas அனைத்துலகப் பள்ளி மாணவியுமான ரீமாஷினி முன்னதாக அங்கு நடைபெற்ற வட்டார ரீதியிலான போட்டியில் வெற்றிப் பெற்றார்.
இதையடுத்து கோலாலாம்பூரில் நடைபெற்ற குளோபல் சுற்றில் இந்தியா, சீனா உட்பட 30 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் களம் கண்டார்.
200 உலகப் பொது அறிவுக் கேள்விகளுக்கு பதில் கூறுதல், கொடுக்கப்படும் தலைப்புகளில் நிகழ் நேரத்தில் கட்டுரை எழுதுதல், விவாதம் போன்ற அம்சங்களை இப்போட்டி உட்படுத்தியது.
அவற்றில் தனிநபர் மற்றும் குழுப் பிரிவுகளில் 2 தங்கம், 5 வெள்ளி என மொத்தம் 7 பதக்கங்களை ரீமாஷினி கைப்பற்றினார்.
இதையடுத்து, அமெரிக்காவின் பிரசித்திப் பெற்ற Yale பல்கலைக் கழகத்தில் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
அதிலும் வெற்றிப் பெற்று வீட்டுக்கும் பிறந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்க அவரை வாழ்த்துவோம்.