
சிரம்பான், ஆகஸ்ட் 2 – கடந்த ஜூலை 26 ஆம் தேதி, சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மற்றும் பண்ணிசை பாடசாலை இணைந்து வழங்கிய லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ‘சேர்ந்திசை திருமுறை விண்ணப்பம் 2025’ மிக சிறப்பாக நடைபெற்றது.
லோரோங் ஜாவா தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு முகமது ரஸி பாலன் பின் அப்துல்லா அவர்களின் தலைமையிலும் ஆசிரியர்களின் பேராதரவோடும் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.
மேலும் மலேசிய வேதாத்திரி SKY மனவளக்கலை அறக்கட்டளையின் தலைவர்,துணைப் பேராசிரியர் அருள்நிதி ஆறுமுகம் பாலகிருஷ்ணன் இவ்விழாவில் முக்கிய பிரமுகராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
இந்த சேர்ந்திசை திருமுறை விண்ணப்ப நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் வயலின் கலைஞர் சிவத்திரு கார்த்திகேயன் மற்றும்மிருதங்க கலைஞர் சிவத்திரு குமரேசன் இந்திரன் அவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
திருமுறைப் பயிற்சி மையமாக திகழும் பண்ணிசைப் பாடசாலை, லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் திருமுறைப்பண்ணிசை வகுப்பை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்து சமயத்தின் மாமந்திரமாக திகழக்கூடிய 12 திருமுறைகளையும் சிறந்த பண்ணுடனும் தாளத்துடனும் மாணவர்களும் பெரியவர்களும் ஓதுவதற்கு பண்ணிசை பாடசாலை பெருமளவில் துணை புரிந்து வருகின்றது.
இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினர் பெரும்பாலும் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக மட்டுமே திருமுறைகளைக் கற்று வரும் நிலையில், பண்ணிசை பாடசாலை மையம் திருமுறை ஓதுவது நமது வாழ்வியலின் ஒரு முக்கிய பகுதி என்பதை உணர வைத்து வருகின்றது என்றால் மிகையாகாது.
நமது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் திருமுறை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும் கோவில்கள் மட்டுமல்லாமல் அனைத்து இல்லங்களிலும் திருமுறை வழிபாடுகளை வேரூன்ற செய்கின்றனர் பண்ணிசை பாடசாலை இயக்கத்தினர்.
அதே நேரத்தில், கோவில்களிலும், வீட்டு விசேஷம் மற்றும் துக்க காரியங்களிலும் மற்றும் பஞ்சபுராணம் ஓதுவதற்கு மட்டும் திருமுறை அல்ல மாறாக, தினசரி வீட்டில், குடும்ப உறுப்பினர்களோடு இறை வழிபாடாக சேர்ந்து திருமுறை ஓதப்படவேண்டும் என்பதை அவர்கள் மாணவர்களுக்கு தொடர்ந்து உணர்த்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த சேர்ந்திசை திருமுறை விண்ணப்பம், அனைத்து மாணவர்களும் திருமுறைகளை தெள்ள தெளிவாக ஓதுவதற்கு வழி வகை செய்கின்றது.
இந்த தேன் தமிழ் திருமுறை நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
பண்ணிசை பாட சாலையில் இணைந்து திருமுறைகளை கற்று தேர விருப்பம் கொண்டவர்கள் கலைவாணி நாகப்பன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.