
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில், மலேசியாவின் விமானப் பயணிகளின் வரத்து 11.4% உயர்ந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த அதிகரிப்பு பெரும்பாலும் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளால் ஏற்பட்டது; அவர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் மலேசியாவில் தங்க அனுமதி பெற்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், தேசிய விமான ஆலோசனை மன்றமான NACC, KLIA 1 மற்றும் KLIA 2-டின் இணைப்பை துரிதப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சொன்னார்.
இதன் மூலம் பயணிகள், விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் அல்லது பயணப்பெட்டிகளை எடுக்காமல், எளிதாக முனையங்களுக்கு இடையில் மாறிச் செல்ல முடியும்.
“டெர்மினல் 1 மற்றும் 2 இணைப்பு” என்பதன் பொருள், இரண்டு முனையங்களும் நேரடி இணைப்பை (link) அமைப்பதாகும்.
தற்போது இரண்டு முனையங்கள் இருந்தாலும், அவை இருவேறு விமான நிலையங்கள் போல செயல்படுவதாக, தேசிய விமான ஆலோசனை மன்றக் கூட்டத்திற்குப் பின் தெரிவித்தார்.
அனைத்து முக்கிய விமானச் சேவை நிறுவனங்களும் இந்த இணைப்பை ஆதரிக்கின்றன.
இது, Malaysia Airports Holdings Bhd (MAHB) நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது என்றார் அவர்.