ஜோகூர் மாநில விளையாட்டுத் தூதராக பூப்பந்து சகாப்தம் டத்தோ லீ சொங் வெய் நியமனம்

ஜோகூர் பாரு, மார்ச்-14 – பூப்பந்து சகாப்தம் டத்தோ லீ ச்சொங் வெய், ஜோகூர் மாநிலத்தின் விளையாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அதனை அறிவித்தார்.
இந்நியமனத்தின் வழி, மாநிலத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுப்பதில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களின் நட்சத்திரக் குழுவில் ச்சொங் வெய் இணைகிறார்.
நியூ சிலாந்து All-Blacks ரக்பி அணியின் முன்னாள் நட்சத்திரம் சோனி பில் வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் Tim Cahill உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.
ஜோகூரில் கால்பந்து மேம்பாடு மட்டும் தனது குறிக்கோள் அல்ல; பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, ரக்பி என எல்லா விளையாட்டுகளையும் தரமுயர்த்துவதே என துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், ஜோகூர் மாநில விளையாட்டுத் தூதராக தாம் நியமிக்கப்பட்டிருப்பதை பெரும் பொறுப்பாகக் கருதி சேவையாற்ற தயாராக இருப்பதாக, ச்சொங் வெய் கூறினார்.
என் மீது TMJ வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றி, ஜோகூரின் விளையாட்டு மேம்பாட்டுப் பணிகளுக்கு பங்களிப்பேன் என்றார் அவர்.
மூன்று முறை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வெற்றியாளரான ச்சொங் வெய், ஓய்வுப் பெற்று விட்டாலும், உலக அரங்கில் இன்னமும் மலேசியப் பூப்பந்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார்.