
பூச்சோங், மார்ச்-18 – சிலாங்கூர் பூச்சோங் பெர்டானா ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பெருமாள் ஆலயத்தில் இந்தியர்களுக்காக நேற்று AI இலவசப் பயிற்சி ஒன்று நடத்தப்பட்டது.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ யீ பின் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.
பயிற்றுநர் ஜேய் கண்ணன் தலைமையில் ChatGPT மற்றும் உற்பத்திக்கான இதர AI கருவிகள் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பயிற்சியளிக்கப்பட்டது.
பயிற்சி பட்டறைக்கான பதிவு திறக்கப்பட்ட போதே ஆதரவு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாக, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதியான ராஜசூரியா கூறினார்.
AI-யில் நாம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ உள்ளது; குறிப்பாக எதிர்கால வர்த்தகமே AI கையில் தான் இருக்குமென்பதால் இந்த AI தொழில்நுட்பம் குறித்து நாம் தெரிந்து வைத்திருப்பது முக்கியம் என இன்னோர் பிரதிநிதியான P.S.ராஜூ கூறினார்.
ஆலயம் என்பது வெறும் வழிபாட்டுத் தலமாக இல்லாமல் சமூக மேம்பாட்டுக்கான முக்கிய இடமாகவும் திகழ வேண்டும் என ஏற்கனவே இயோ யீ பின் கூறியிருந்ததற்கு ஏற்ப, இப்பயிற்சி ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்கு தங்கள் ஆலயம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஆலயத் தலைவர் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
இந்த ஒரு நாள் AI இலவச பயிற்சியில் நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு பயன்பெற்றதாக, பங்கேற்பாளர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் கூறினர்.
இதனிடையே பங்கேற்பாளர்களுக்கு AI பயிற்சியில் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சமுதாய உருமாற்றத்திற்கு ஆலயங்களுடன் ஒன்றிணைந்து பூச்சோங் நாடாளுமன்றம் இன்னும் பல நிகழசிகளை நடத்த திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.