
கோலாலம்பூர், டிசம்பர்-7, PLKN எனப்படும் தேசிய சேவைப் பயிற்சியை, மற்ற நாடுகளில் உள்ள கட்டாய இராணுவ சேவையுடன் ஒப்பிடக் கூடாது.
இரண்டும் ஒன்றல்ல என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் (Datuk Seri Mohamed Khaled Nordin) தெளிவுப்படுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது ஒரு நீண்ட காலத்திற்கான இராணுவ சேவையாகும்;
ஆனால் PLKN, வெறும் அடிப்படை இராணுவப் பயிற்சியை மட்டுமே சார்ந்ததல்ல; மாறாக, தேசியத்தை விதைக்கும் நோக்கில் சுய அடையாள மேம்பாடு, தேசப் பற்று, ஒற்றுமை உள்ளிட்ட அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
PLKN 3.0 திட்டத்தை அரசாங்கம் தொடர வேண்டாமென, தேசக் கட்டமைப்பு, கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா (Datuk Seri Saifuddin Abdullah) நேற்று முன்தினம் பரிந்துரைத்தது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
புதுப்பொலிவுப் பெற்றுள்ள PLKN பயிற்சி, தேசபக்தியின் உணர்வை வலியுறுத்தும், நல்ல ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும், எப்போதும் ஒற்றுமை உணர்வை வளர்க்கும் மற்றும் தன்னார்வத் தொண்டுணர்வைத் தூண்டும் ஒரு தலைமுறையை உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்படுமென காலிட் நோர்டின் சொன்னார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அடுத்தாண்டு முதல் 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த PLKN தேசிய சேவைப் பயிற்சி மீண்டும் அறிமுகம் காண்கிறது.