
கோலாலம்பூர், மே-15 – SPM தேர்வில் அனைத்து பாடங்களிலும் ‘A’ நிலையில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு, எந்த பாரபட்சமுமின்றி மெட்ரிகுலேஷன் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அதில் ‘A+’ , ‘A’ இரண்டையும் சேர்த்துக் கொண்டு ‘A-‘ தேர்ச்சியை மட்டும் ஒதுக்குவது நியாயமல்ல.
மிகச் சிறந்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்குவதாக அதற்கு கல்வி அமைச்சு நியாயம் கற்பிக்க முயலுவதும் சரியல்ல என, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கூறினார்.
‘A’ தேர்ச்சி என்பது ‘A+’, ‘A’, ‘A-‘ ஆகிய மூன்றையும் குறிக்கும் என நம்பிக் கொண்டுள்ள மாணவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இது போதாதென்று, குறைந்தது 10 பாடங்களில் ‘A’ பெற்றிருக்க வேண்டுமென்றும் நிபந்தனை ‘மேம்படுத்தப்பட்டுள்ளது’.
ஆனால் எல்லா மாணவர்களும் 10 பாடங்களை எடுப்பதில்லை; எடுக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
பலர் 9 பாடங்களை எடுத்து அதில் மிகச் சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.
எனவே, குறைந்தபட்சம் 10 பாடங்கள் என நிர்ணயித்தால் அவர்களுக்கு அது நியாயமாக இருக்காது.
கல்வி அமைப்பு முறையில் காணப்படும் பலவீனங்களுக்கு மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது.
கல்வி முறையில், அடைவுநிலை ஒருமுகப்படுத்தலை விட வாய்ப்பு சமத்துவமே முக்கியமாகும்.
எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைச்சு நல்ல முடிவை எடுக்க வேண்டுமென, இன்று வெளியிட்ட அறிக்கையில் சிவராஜ் வலியுறுத்தினார்.