
கோலாலம்பூர், மார்ச்-20 – ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்துக்கான மாற்று நிலம் உறுத்ஜி செய்யப்படும் வரை உடைக்கப்படாது என, கோலாலம்பூர் மாநகர மேயர் உத்தரவாதமளித்துள்ளார்.
அந்நிலம் தனியாருக்குச் சொந்தமானதாகும்; அரசாங்கத்துடையது அல்ல என டத்தோ ஸ்ரீ மைமூனா மொஹமட் ஷாரி கூறினார்.
அந்நிறுவனம் அங்கு பள்ளிவாசலைக் கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில், ஆலயத்தை இடமாற்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது; என்றாலும், மாற்று நிலம் உறுதி செய்யப்படும் வரை ஆலயத்தின் மீது யாரும் கை வைக்காமலிருப்பதை DBKL உறுதிச் செய்யும் என அவர் தெரிவித்தார். அச்சமயம் அவருடன் இருந்த ஆலயத் தலைவர் பார்த்திபன் ஆலயமும் பள்ளிவாசலும் அருகருகே இருப்பதில் தங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லையென கூறினார். அப்படியே இடமாற வேண்டிய சூழல் வந்தாலும் அதற்கு அதிகமான கால அவகாசம் தேவைப்படும் என்றார் அவர்.தங்களுக்கு உடனடியாக இடமாற வேண்டும் எனும் நிர்பந்தம் வரக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆலய நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடரும்; பக்தர்களும் எவ்வித கவலையுமின்றி வழிபாடுகளைத் தொடரலாமென, டத்தோ ஸ்ரீ மைமூனா தெரிவித்தார்.
கோயில் இடமாற்றம் சுமூகமாகவும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருப்பது கட்டாயம் உறுதிச் செய்யப்படும்.
ஆலய இடமாற்றத்திற்கு காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் மேயர் தெளிவுப்படுத்தினார்.
இவ்விவகாரத்திற்கு நல்ல தீர்வு எட்டப்பட்டு, நல்லிணக்கம் கட்டிக் காக்கப்படுமென என அவர் உறுதியளித்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஸ்ரீ மைமூனா அவ்வாறு கூறினார்.