
ஈப்போ, அக்டோபர்-26, ஈப்போவில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர வெடிச் சத்தம் குறித்து ஆராய வரும் செவ்வாய்க்கிழமை முக்கியக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இன்னமும் மர்மமாகவே இருக்கும் அந்த வெடிச் சத்தம் மற்றும் அதிர்வுக்கான காரணத்தைக் கண்டறிவதே, அக்கூட்டத்தின் நோக்கமாகும்.
சம்பந்தப்பட்ட 20 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதில் பங்கேற்கவிருப்பதாக, பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் ஆரிஸ் (Datuk Azizi Mat Aris) தெரிவித்தார்.
தேவைப்பட்டால் பின்னர் வெளிநாட்டு நிபுணர்களின் சேவைப் பெறப்படலாம் என்றார் அவர்.
மக்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை முன்னிறுத்தி அக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக டத்தோ அசிசி சொன்னார்.
கடந்த திங்கட்கிழமை காலை 11 மணி வாக்கில் தாசேக், ஈப்போ விளையாட்டரங்கம், மேரு, ஃபாலிம், மஞ்சோய், ச்செமோர், சுங்கை சிப்புட் ஆகிய ஈப்போ சுற்று வட்டாரங்களில் பெரும் அதிர்வு உணரப்பட்டது.
சில வினாடிகளுக்கு நீடித்த அதிர்வுகளுக்குப் பிறகு பயங்கர வெடிப்புச் சத்தமும் கேட்டதால் பொது மக்கள் பீதியடைந்தனர்.
ஆனால் அச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை.