Latestமலேசியா

தொழிற்திறன் & தொழில் நுட்பக் கல்விக்கு இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் – செனட்டர் நெல்சன் அறிவுறுத்து

கோலாலம்பூர், நவ 29 – 4.0 தொழிற்புரட்சியை எதிர்கொள்ள 12வது மலேசியத் திட்டத்தில் தொழிற்திறன் மற்றும் தொழில் நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தரமான மனித மூலதனத்தை உருவாக்கவும், திறமையானவர்களுக்குத் தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தரவும் தொழிற்திறன் மற்றும் தொழில் நுட்பக் கல்வி கைக்கொடுக்கிறது என ம.இ.கா கல்விக் குழுத் தலைவர், செனட்டர் டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே UP_TVET வழி அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் நாட்டின் தொழிற்திறன் மற்றும் தொழில் நுட்பக் கல்வி வாய்ப்பினை நமது மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தொழிற்திறன் மற்றும் தொழில் நுட்பக் கல்வி பட்டையைக் கல்வி வரையில் கற்கும் வாய்ப்போடு நின்று விடாமல், இளங்கலை மற்றும் முதுகலை கல்வி வரை பயிலும் வாய்ப்பையும் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதோடு, குறிப்பிட்டத்துறையில் கல்வி கற்று நிபுணத்துவமடைவதால், இலகுவாக வேலை வாய்ப்புப் பெறுவதற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என டத்தோ நெல்சன் கூறினார்.

தொழிற்திறன் மற்றும் தொழில் நுட்பக் கல்வி கற்க ஆர்வம் கொண்ட நமது இந்திய மாணவர்கள் https://mohon.tvet.gov.my/ எனும் அகப்பக்கத்தில் தேவையான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தொழிற்திறன் பட்டதாரிகள் சாதாரண கல்வி கற்ற மாணவர்களைக் காட்டிலும் சந்தைத் திறனில் மேலோங்கியுள்ளனர் என டத்தோ நெல்சன் கூறினார். SPM சான்றிதழ் இல்லாத போதும், SKM 3 சான்றிதழ் கொண்டிருப்பவர்களும் UP_TVET வழி அரசாங்கத் தொழிற்திறன் மற்றும் தொழில் நுட்பக் கல்வி கற்க விண்ணப்பிக்கலாம்.

மனிதவள அமைச்சின் நேரடிப் பார்வையில் இயங்கும் திவெட் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கும், உயர்கல்விக் கூடங்களில் தொழில் திறன் பயிற்சித் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் மனிதவள அமைச்சு மேற்கொண்டிருக்கும் வியூகங்கள் குறித்து டத்தோ டாக்டர் நெல்சன் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மனிதவள துணை அமைச்சர் பதிலளித்தார்.

திவெட் (TVET) எனப்படும் தொழில் திறன் பயிற்சித் திட்டங்களை வலுபடுத்தவும், தற்கால சூழலுக்கு ஏற்ப சரியான வழித்தடத்தில் இந்தத் துறையை கொண்டு சேர்ப்பதற்கும், தொழில் திறன் தொடர்பான கல்வி அமலாக்கத்தைக் கண்காணிக்க மட்டுமல்லாது தொழில் திறன் மேம்பாடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், தேசிய தொழில் திறன் மேம்பாட்டு மேலவை வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் தெரிவித்தார்.

ஆகவே, நமது அரசாங்கம் தொழிற்திறன் மற்றும் தொழில் நுட்பக் கல்வி மீது அதிக கவனம் செலுத்துவதாவும், நம்மினம் இதனை நன்கு பயன்படுத்தி, பயனடையுமாறு கேட்டுக் கொண்டார். திவெட் எனப்படும் தொழில் திறன் கல்வி பயில, நமது மாணவர்களுக்கு ம.இ.கா வழிகாட்டும் என செனட்டர் டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!