
ஈப்போ, ஜூலை 2 – தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள தனது வீட்டிற்கு பின்னால் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த 68 வயதுடைய மாது ஒருவர் மீட்கப்பட்டார். இன்று காலை மணி 8.40 அளவில் அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தம்புன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மீட்புக் குழு அனுப்பிவைக்கப்பட்டதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் துணை இயக்குனர் சுபரோட்ஷி நோர் அகமட் ( Subarodzi Nor Ahmad ) தெரிவித்தார்.
எட்டு நிமிடத்திற்குள் தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள South Ward ட்டிற்கு சென்ற தீயணைப்பு மீட்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்தபோது அந்த மாது 3 மீட்டர் ஆழமும் , சுமார் 1 மீட்டர் அகலமுள்ள, மூடப்படாத கிணற்றில் விழுந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து ஒரு தீயணைப்பு வீரர் பாதிக்கப்பட்டவருக்கு உதவ கிணற்றுக்குள் இறங்கி அந்த மாதுவை ஸ்டெரெச்சரில் வைத்து பாதுகாப்பாக மேலே தூக்கிவந்தார். அதன் பின் அம்மாது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக சுபரோட்ஷி கூறினார்.