
ஜெய்ஜிங், நவ 8 – சீனாவில் ஒரு வீட்டின் சமையல் அறையில் எரிவாயு வெடித்து உடலில் 90 விழுக்காட்டிற்கும் மேலான தீக்காயங்களுக்கு உள்ளானபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வீரத்துடன் மனைவியை காப்பாற்றிய கணவர் பின்னர் மரணம் அடைந்தார்.
அந்த கணவரின் ஆழ்ந்த அன்பு மற்றும் ஆபத்தையும் கருதாமல் மேற்கொண்ட துணிச்சலான செயல் சமூக ஊடகங்களில் எண்ணற்ற மக்களை கவர்ந்ததோடு அவர்களிடையே பெரிய நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் ஹெனான் மாநிலத்தில் லுயோயாங்கில் ( Luoyang ) அக்டோபர் 10 ஆம் தேதி, லியு. (Liu) என்ற நபர் தனது மனைவியுடன் காலை உணவைத் தயாரிப்பதற்காக அடுப்பைப் பயன்படுத்த முயன்றபோது இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது.
ஒரு வெடிப்பிலிருந்து ஒரு பெரிய தீப்பந்தத்தால் சமையலறை சூழ்ந்த தருணம் சமூக வலைத்தளத்தில் காணொளியாக வெளியானது. அங்கு ஏற்பட்ட பயங்கரமான வெடிப்பினால் லியுவின் ஆடைகள் கிழிந்ததோடு சமையல் அறைக்கு வெளியே அவர் தூக்கி வீசப்பட்டார். வெடிப்பு ஏற்பட்டபோது, சமையலறை ஜன்னல்கள் மற்றும் கதவுகள் முற்றாக நொறுங்கியது. தனது உடலில் 92 விழுக்காடு தீக்காயங்கள் இருந்தபோதிலும், எனது தாயாரை காப்பாற்ற தந்தை சமையலறைக்குத் திரும்பினார் என லியுவின் மகன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.