
கோலாலம்பூர், அக்டோபர் 11 – 2024-2027ஆம் ஆண்டிற்க்கான ம.இ.கா கட்சியின் தேர்தல் கடந்த மாதங்களில் நடைபெற்று முடிந்த நிலையில், அண்மையில் ம.இ.காவின் புதிய தேசிய நிர்வாகத்தினர் அறிவிக்கப்பட்டனர்.
தெரிவுசெய்யப்பட்ட மற்றும் நியமனம் செய்யப்பட்ட அனைத்துத் தலைவர்களும் ஒத்துழைப்பு நல்கி, கட்சி அடுத்தப் பரிமாணத்தை எட்டுவதற்கு மஇகாவிற்கு துணை நிற்கும்படி டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமதறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய இலக்குகளைக் கொண்டு பயணிக்கும் கட்சிக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்றார், அவர்.
வருகின்ற 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை நிலைநாட்ட வேண்டும்; இதற்கிடையில், ம.இ.காவின் புதிய கட்டடப் பணியையும் தொடங்கி நன்முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
அதேவேளையில், மலேசிய இந்திய சமுதாயத்தை பல வகையாலும் தற்காக்க வேண்டிய பெருங்கடமை நம் கைகளில் இருப்பதால், கட்சியின் தேசியத் தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கும்படி கட்சியினரை மீண்டும் கேட்டுக் கொள்வதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.