
ஜோர்ஜ்டன், செப்டம்பர்-24 – பினாங்கில், பத்து ஃபெரிங்கிக்கு (Batu Ferringhi) அடுத்து முக்கிய சுற்றுலா கடற்கரையான தெலுக் பஹாங்கில் (Teluk Bahang) நேற்று 3.6 மீட்டர் நீளமுடைய முதலை ஒன்று கடும் போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டது.
முன்னதாக அக்கடற்கரையில் முதலை காணப்பட்டதாக பிற்பகல் 3.30 மணியளவில் பொது மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்த பொது தற்காப்புப் படையான APM, பாதுகாப்புக் கருதி சுமார் 1.3 கிலோ மீட்டர் கடற்கரைப் பகுதியை மூடியது.
கடுமையான அலைகள் காரணமாக முதலையைப் பிடிக்கும் முயற்சிகள் தொடக்கத்தில் தோல்வியடைந்தன.
பின்னர் உள்ளூர் மீனவர்களின் வலைகளைப் பயன்படுத்தி முதலைக்கு கயிறு போட்டுத் தடுத்து, மாலை 6.10 மணியளவில் அது கரைக்கு கொண்டு வரப்பட்டது.
அதன் போது முதலை வலையை கடித்து தப்பினாலும், இறுதியில் 20 பேர் கொண்ட APM வீரர்களிடம் சிக்கியது.
முதலை தற்போது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN-னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.