
கோலாலாம்பூர், ஜனவரி-6 – புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய உரை சாதாரண கொள்கை அறிவிப்பு அல்ல;
மாறாக சீர்திருத்தங்களுக்கான கடப்பாட்டின் மறு உத்தரவாதமாகும்.
பி.கே.ஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், அதன் மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினருமான சிவமலர் கணபதி அவ்வாறு வருணித்துள்ளார்.
பிரதமர் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாக கட்டுப்படுத்துவது, சட்டத் துறைத் தலைவர் மற்றும் அரசு தரப்பு தலைமை வழக்கறினர் அதிகாரங்களைப் பிரிப்பது, தகவல் சுதந்திர சட்டத்தை அறிமுகப்படுத்துவது போன்ற முக்கிய சீர்திருத்தங்களை அன்வார் அறிவித்தார்.
இவை, ‘ரிஃபோர்மாசி’ வாக்குறுதி காற்றில் பறந்தததாக எதிர்கட்சிகள் உள்ளிட்டோர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நேரடி பதிலாகும் என சிவமலர் குறிப்பிட்டார்.
அதேசமயம், SARA, STR நிதி உதவி, தமிழ் பள்ளிகளுக்கான நிதி போன்ற உடனடி நிவாரணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த திருத்தங்களை வீம்புக்காக புறக்கணிக்கும் எதிர்க்கட்சியினர் அரசியல் பிழை செய்கிறார்கள் என அவர் விமர்சித்தார்.
‘ரிஃபோர்மாசி’ வெறும் முழக்கம் அல்ல, சீர்திருத்தங்களின் அடையாளம்….
மடானி நிர்வாகத்தின் கீழ் இந்த சீர்திருத்தங்கள் மேலும் புதிய வேகத்துடன் தொடரும் என்பதை, ஒரே உரையில் பிரதமர் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக சிவமலர் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.



