
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 2 – கடந்த மாதம் சைபர்ஜெயா மருத்துவமனையில் மொட்டை கை ஆடை (sleeveless top) அணிந்திருந்த பெண்ணை, நோயாளியைச் சந்திக்கத் அனுமதிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் பரவிய குற்றச்சாட்டை சைபர்ஜெயா மருத்துவமனை மறுத்துள்ளது.
அந்த பெண்ணுக்கு நுழைவு மறுக்கப்படவில்லை என்றும், பாதுகாப்பு பணியாளர்கள் பொதுத் துறை சுகாதார நிலையங்களில் பின்பற்றப்படும் உடை வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை மட்டுமே வழங்கியதாகவும் மருத்துவமனை விளக்கமளித்தது.
மேலும், நோயாளிகள் இந்த விதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்றும், எந்த சூழ்நிலையிலும், குறிப்பாக அவசர நிலைகளில் சிகிச்சையும் பார்வையாளர்கள் உள்நுழைவும் மறுக்கப்படாது என்றும் உறுதியளித்தது.
மருத்துவமனை, நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மரியாதை, ஒழுங்கு மற்றும் வசதியான சூழல் நிலைநிறுத்தப்படுவதற்காக இவ்வகை அடிப்படை வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்றும் விளக்கியது.
மேலும், மக்களின் நலனைக் காக்க சுகாதார அமைச்சு வகுத்துள்ள நோக்கத்துக்கு இணங்க, நட்பு மனப்பான்மையுடனும் தொழில்முறை சிகிச்சை சேவைகளை வழங்கும் என்று மருத்துவமனை தெரிவித்தது.
கடந்த வாரம், தன் சகோதரனைச் சந்திக்கச் சென்றபோது sleeveless top அணிந்திருந்ததால் மருத்துவமனைக்குள் செல்ல தடுக்கப்பட்டதாக ஒரு பெண் சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இரு மருத்துவமனை பாதுகாவலர்கள் தன் உடை விதிகளைச் சுட்டிக்காட்டினாலும், தான் வலியுறுத்திய பிறகே நோயாளியை வெறும் 5 நிமிடம் மட்டுமே சந்திக்க அனுமதி கிடைத்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.



