
கோலாலம்பூர், ஏப்ரல்-12- திரங்கானு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தார் SPK எனப்படும் ஒருபோதும் சிறப்பு சுற்றறிக்கைப் பட்டியலில் வைக்கப்படவில்லை.
அப்பட்டியலில் சேர்க்கப்பட அவரொன்றும் குற்றவாளியல்ல, என தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் கூறினார்.
எனவே, எந்தவொரு தவறு செய்ததாகவும் நிரூபிக்கப்படாத தம்மை ‘ஆபத்தானவர்கள் பட்டியலில்’ வைத்திருப்பதாக சம்சூரி கூறுவது உண்மையல்ல என IGP சொன்னார்.
தம்மை அணுக்கமாகக் கண்காணிக்க போலீஸ் பயன்படுத்துவதாக சம்சூரி சுட்டிக் காட்டிய TCO என்ற சொல்லும் சரியானதல்ல.
TCO என்பது உண்மையில் Travel Control Officer அல்லது பயணக் கட்டுபாட்டு அதிகாரி என்ற போலீஸ் பதவியைக் குறிக்கும் என IGP தெளிவுப்படுத்தினார்.
நாட்டின் நுழைவாயில்களில் பணியாற்றும் போலீஸ் படையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே TCO என அழைக்கப்படுவர்.
ஒருவேளை SPK-வைத் தான் சம்சூரி தவறாக TCO எனக் கூறியிருக்கிறர் போலும் என்றார் அவர்.
SPK கூட, போதைப்பொருள், 3R உள்ளிட்ட குற்றங்களுக்காக தேடப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடியவர்களைத்தான் பட்டியலிடும் என்றார் அவர்.
தனது கைப்பேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படும் அளவுக்கு தாம் TCO கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக சம்சூரி முன்னதாகக் கூறியிருந்தார்.
தாம் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.
அதனை மறுத்த உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், சம்சூரியை வேவு பார்க்கும் அவசியம் அரசாங்கத்துக்கு இல்லையென்றார்.
நாட்டிலுள்ள முக்கியப் புள்ளிகள் TCO பட்டிலில் வைக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான்; தாமும் அதில் விதிவிலக்கல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.