
கோலாலம்பூர், மார்ச்-23 – ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம், புரியாத சிலர் கூறுவது போல் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதல்ல.
மாறாக, கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL-லின் முழு அனுமதியோடு அக்கோயில் கட்டப்பட்டதாக, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இன்னொன்று இந்த ஆலயம் வேறோர் இடத்திலிருந்து தற்போதுள்ள இடத்திற்கு மாறி வந்ததாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுவும் உண்மையில்லை; காரணம் ஆரம்பத்திலிருந்தே அக்கோயில் அங்கு தான் செயல்பட்டு வருவதாக சரவணன் சொன்னார்.
2006-ஆம் ஆண்டு சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கோயிலின் சிறு பகுதி அதாவது சமையலறையையும் அர்ச்சகர் தங்குமிடத்தையும் உடைக்குமாறு DBKL கேட்டுக் கொண்டது.
அதற்கு ஒப்புக் கொண்டு அந்த சமையல் அறையும் அர்ச்சகர் தங்குமிடமும் மட்டுமே கோயிலின் முன்புறம் மாற்றப்பட்டது; ஆனால் மையக் கோயில் காலங்காலமாக அங்கே தான் செயல்பட்டு வருகிறது.
அப்போது கோயிலிருக்கும் நிலம் DBKL-லுக்குச் சொந்தமாக இருந்தது.
DBKL அனுமதியோடு ஒரு பகுதியை இடமாற்றம் செய்ய ஆலய நிர்வாகமும் ஒப்புக் கொண்டது; அதற்கான மொத்தச் செலவு 120,000 ரிங்கிட்டாகும்.
அதில் 80,000 ரிங்கிட்டை அப்போதைய ம.இ.கா தேசியத் தலைவர் துன் எஸ்.சாமிவேலு ஏற்றுக் கொள்ள, எஞ்சிய 40,000 ரிங்கிட் மஸ்ஜித் இந்தியா சுற்று வட்டார வியாபாரிகள் கொடுத்த நன்கொடையாகும்.
இது நடந்தது 2008-ஆம் ஆண்டு; ஆனால் பலர் என்னமோ 2012-ல் தான் அங்கு கோயில் புதிதாகக் கட்டப்பட்டதாக நினைத்து ‘கொந்தளிக்கின்றனர்’.
அவர்களைக் குற்றம் சொல்வதும் சரியல்ல; காரணம் அன்று நடந்தது பலருக்குத் தெரியாது; எனவே அப்போது கூட்டரசு துணையமைச்சராக இருந்து நடந்த சம்பவங்களில் பங்கேற்றவன் என்ற முறையில் மக்களுக்கு உண்மை நிலவரத்தை விவரிக்க வேண்டியது தன் கடமையாகும் என்றார் அவர்.
2013-ல் நில மற்றும் கனிமங்கள் துறை கூட்டரசு பிரதேச அமைச்சின் கீழிருந்து அரசாங்கத் தலைமைச் செயலாளரின் கீழ் மாற்றப்பட்டு விட்டது.
மறு ஆண்டே கோயில் நிலம் தனியாருக்கு விற்கப்பட்டது.
ஆக இதில் எங்கிருந்து கோயில் சட்டவிரோதமாக ஊரார் நிலத்தில் முளைத்தது என தனக்கு விளங்கவில்லை என சரவணன் கேட்டார்.
சட்டவிரோதமாக இருந்திருந்தால், கோயிலுக்கு DBKL ஆதரவுக் கடிதத்துடன் மின்சார வசதியும் தண்ணீர் வசதியும் வழங்கப்பட்டிருக்குமா?
சட்டவிரோதமாக இருந்திருந்தால் 2008-ஆம் ஆண்டே DBKL அக்கோயிலை உடைத்திருக்கலாமே?
சட்டவிரோதமாக இருந்திருந்தால் கோயில் நிலத்தை DBKL ஏன் துப்புரவுச் செய்ய வேண்டும் என சரவணன் கேள்விக்கனைகளை அடுக்கினார்.
எனவே தயவு செய்து இது சட்டவிரோத கோயில் என யாரும் முத்திரைக் குத்தாதீர்கள்; நூறாண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த கோயிலை கொச்சைப்படுத்தாதீர்கள் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் கேட்டுக் கொண்டார்.
கோயில் விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்படுமென அரசாங்கமும் தனியார் நிறுவனமும் உத்தரவாதம் அளித்துள்ளன.
எனவே நல்லதே நடக்குமென எதிர்பார்ப்போம் என இன்றைய செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஸ்ரீ சரவணண் கூறினார்.
அக்காலக்கட்டத்தில் சரவணனுக்குப் பிறகு கூட்டரசு பிரதேச துணையமைச்சராக இருந்த டத்தோ லோக பால மோகனும் உடனிருந்தார்.