
மலாக்கா, ஆகஸ்ட்-26 – FAM எனப்படும் மலேசியக் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் சேரன் நடராஜாவுக்கு, மலாக்கா ஆளுநர் துன் அலி ருஸ்தாம் அவர்களின் 76-ஆவது பிறந்நாளை ஒட்டி, டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் மாநில கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவருமான சேரன், கடந்த பிப்ரவரியில் தான் FAM-மின் 4 உதவித் தலைவர்களில் ஒருவராகப் போட்டியிட்டு தேர்வானார்.
ஒரு வழக்கறிஞருமான டத்தோ சேரன், இதற்கு முன் பரதன் கிண்ண கால்பந்துப் போட்டி ஏற்பாடுகளின் மூலம் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
அனைத்துலக அளவை எடுத்துக் கொண்டால் சுவிட்சர்லாந்தில் செயல்படும் விளையாட்டு நடுவர் மன்ற உறுப்பினராகவும், ஆசியக் கால்பந்து சம்மேளனமான AFC-யின் கட்டொழுங்கு வாரிய உறுப்பினராகவும் சேரான் உள்ளார்.
இவ்வேளையில், மலாக்கா ஆளுநர் பிறந்தநாளில் டத்தோ விருது பெற்ற மற்றொரு பிரமுகர் ம.இ.காவின் எஸ். முருகவேலு ஆவார்.
ம.இ.காவின் கட்டொழுங்கு செயற்குழுவின் தலைவராகவும் உள்ள வழக்கறிஞரான முருகவேலுவின் சமூகப் பொது பணிகளை அங்கீகரிக்கும் வகையில் டத்தோ பட்டம் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.