
கோலாலம்பூர், மே-7 – கெசாஸ் நெடுஞ்சாலையில் வேனிலிருந்து தூக்கி வீசப்பட்டு மரணமடைந்த பெண், காணாமல் போன டத்தின் ஸ்ரீ பமெலா லிங் அல்ல என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகலில் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு அளித்த சுருக்கமான பதிலில் “அது அவரல்ல” என செராஸ் போலீஸ் தலைவர் ACP அய்டில் போல்ஹசான் கூறினார்.
முன்னதாக ஆவான் பெசார் R&R பகுதியில், வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு வேனிலிருந்து பெண்ணொருவர் விழுவதை அல்லது தூக்கி வீசப்படுவதைத் தாம் கண்டதாக, சாட்சி ஒருவர் அவசர எண்களுக்கு அழைத்து தகவல் தெரிவித்தார்.
போலீஸ் வந்து பார்த்த போது அப்பெண் இறந்து போயிருந்தார்.
ஈப்போ மகிழம்பூவைச் சேர்ந்த 44 வயது சீன மாது என அவர் அடையாளம் காணப்பட்டார்.
அப்பெண்ணின் வேனை மோதித் தள்ளி விட்டு தப்பியோடிய வாகனத்தைப் போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
ஏப்ரல் 9-ஆம் தேதி புத்ராஜெயா MACC தலைமையகத்திற்குச் செல்லும் வழியில், டத்தின் ஸ்ரீ பமெலாவை போலீஸ் ‘வெஸ்ட்’ உடையில் மர்ம கும்பல் கடத்திச் சென்றது.
அதில் அவரின் கணவருக்கு தொடர்புண்டா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது