
கோலாலம்பூர், பிப்ரவரி-28 – பல்வேறு சமூக நற்காரியங்களில் ஈடுபட்டு வரும் லெஜன்டரி ரைடர்ஸ் மோட்டார் சைக்கிளோட்டிகள் கிளப், வணக்கம் மலேசியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுள்ளது.
வணக்கம் மலேசியா அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், அதன் நிர்வாக இயக்குநர் எம். தியாகராஜனும் லெஜன்டரி ரைடர்ஸ் கிளப்பின் தோற்றுநர் ஆர். மகேந்திரமணியும் அதில் கையெழுத்திட்டனர்.
CSR எனப்படும் பெறுநிறுவன சமூக பொறுப்புடன் செயலாற்றி வரும் அக்கிளப்பின் நடவடிக்கைகளுக்கு, வணக்கம் மலேசியா இனி அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஊடக பங்காளியாக விளங்கும்.
ஆரம்ப காலம் தொட்டு அக்கிளப்பின் நடவடிக்கைகள் குறித்து வணக்கம் மலேசியா விரிவான செய்திகளை வெளியிட்டு வருகிறது.
இதன் மூலம் லெஜன்டரி ரைடர்ஸ் கிளப்பை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்ததில் வணக்கம் மலேசியாவுக்கு பெரும் பங்குண்டு என, மகேந்திரமணி கூறினார்.
மக்களும் ஏராளமான தமிழ்ப் பள்ளிகளும் தொடர்புகொண்டு தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்கு அது பேருதவியாக இருந்தது.
அவ்வொத்துழைப்பு இன்று புரிந்துணர்வு ஒப்பந்த வடிவில் அதிகாரப்புர்வமாகியிருப்பதால், சமுதாயத்திற்கு இன்னும் பல நற்காரியங்களைச் செய்ய வாய்ப்பேற்படுமென மகேந்திரமணி நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வேளையில், இந்த MOU ஒரு நல்ல முயற்சி என லெஜன்டரி ரைடர்ஸ் கிளப்பின் தலைவர் மொகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
ESG கோட்பாடுகளை அமுல்படுத்திய முதல் மோட்டார் சைக்கிளோட்டிகள் குழுவான லெஜன்டரி ரைடர்ஸ், சமூகச் சேவையோடு இயற்கை வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
நலிவடைந்த உள்ளூர் கலைஞர்களுக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறது.
எனவே, வணக்கம் மலேசியாவுடனான இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் இது போன்ற நற்காரியங்கள் மேலும் அதிகமானோரைச் சென்றடைய துணைபுரியுமென மொகைதீன் நம்பிக்கைத் தெரிவித்தார்.