
கோலாலாம்பூர், ஜூலை-9 – இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் வெளியான உள்ளூர் திரைப்படங்கள் box office-சில் வசூல் வேட்டை நடத்தியுள்ளன.
ஜூன் 30 வரையில் மொத்தமாக 162.89 மில்லியன் ரிங்கிட்டை அவை வசூலித்துள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய வசூல் இதுவாகும்.
6 மாதங்களில் வெளியான 39 உள்ளூர் திரைப்படங்கள் இந்த வசூல் வேட்டைக்கு பங்களித்துள்ளதாக, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
குறிப்பாக animation படமான ‘Ejen Ali The Movie 2’ ஜூன் 30 வரை 55.2 மில்லியன் ரிங்கிட்டை வசூலித்தது.
இதன் வழி அதிக வசூல் செய்த உள்ளூர் animation திரைப்படமாகவும் இது வரலாறு படைத்தது.
உள்ளூர் மட்டுமின்றி, இந்தோனேசியாவில் திரையீடு கண்ட முதல் வாரத்திலேயே அப்படம் 200,000 பார்வையாளர்களை ஈர்த்து மலேசியாவுக்குப் பெருமைச் சேர்த்துள்ளது.
34-ஆவது மலேசியத் திரைப்பட விழா குறித்து கோலாலாம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துணையமைச்சர் அவ்வாறு கூறினார்.
மலேசியத் திரைப்படங்களுக்கு உச்சக்கட்ட அங்கீகாரமாக விளங்கும் இத்திரைப்பட விழா, வரும் நவம்பர் 8-ஆம் தேதி அங்காசாபூரியில் நடைபெறுகிறது.
இவ்வாண்டு புதிதாக ‘சிறந்த அதிரடி சண்டை காட்சிகளுக்கான விருது’ சேர்க்கப்பட்டுள்ளது.
சண்டை காட்சிகளில் பெரும்பாலும் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளும் சாகச நடிகர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டதாக, தியோ நீ சிங் சொன்னார்.
34-ஆவது மலேசியத் திரைப்பட விழாவுக்கான விண்ணப்பங்களை ஜூலை 18 வரை சமர்ப்பிக்கலாம்.