
புத்ராஜெயா, செப்டம்பர்-20 – அனைத்து அரசு துறைகளும், நிறுவனங்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு, அந்தந்த அமைச்சுகளின் அனுமதியைப் பெற்றாக வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் கடன்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சியே அதுவென டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியதாக, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் சொன்னார்.
அரசு நிர்வாக மேலாண்மையை வலுப்படுத்த, வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட அம்சங்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவைகள் ஏற்பட்டிருப்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
திட்டமிடப்படும் வெளிநாட்டுப் பயணங்கள் உண்மையிலேயே தேவையானவை தானா? பெரியக் குழுவை அனுப்பி வைத்தே ஆக வேண்டுமா? அதில் சிக்கனத்திற்கான வாய்ப்புகள் உண்டா? என்பன போன்ற அம்சங்கள் இனி நன்காராயப்பட வேண்டும் என்பதை டத்தோ ஸ்ரீ அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் சிறிய அளவிலான கண்காட்சியைப் பார்ப்பதற்காக செல்லவிருந்த 68 பேரடங்கிய அரசு ஊழியர்களின் பயணத்தை பிரதமர் இரத்துச் செய்தார்.
அவர்களுக்கான விமான டிக்கெட், ஹோட்டல் தங்குமிடக் கட்டணம் போன்றவை தயார் செய்யப்பட்டு விட்ட போதிலும், அது அவசியமான ஒன்றல்ல எனக் கருதி டத்தோ ஸ்ரீ அன்வார் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அமைச்சுகள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அது போன்ற கண்டிப்பான அதே நேரம் சிக்கனமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதாக பிரதமர் சொன்னார்.