
கோலாலம்பூர், அக்டோபர்-14 – டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் பேச்சால், மலாய்க்காரர்கள் மத்தியில் தனது செல்வாக்கு பறிபோனதை உணர்ந்த பிறகே, ஐந்தாண்டுகள் கழித்து அவர் மீது மான நட்ட வழக்குத் தொடுக்க தாம் முடிவுச் செய்ததாக, துன் டாக்டர் மகாதீர் முஹமட் கூறியுள்ளார்.
“நான் ஒரு மலாய்க்கார முஸ்லீம் அல்ல என்ற தோற்றத்தை சாஹிட் உருவாக்கி விட்டார். இதனால் மலாய்க்காரர்கள் மத்தியில் என் செல்வாக்கே போனது” என அந்த முன்னாள் பிரதமர் சொன்னார்.
சாஹிட் மீது தாம் தொடுத்துள்ள வழக்கில் இன்று அவரின் வழக்கறிஞர் தம்மை குறுக்கு விசாரணை செய்த போது, 99 வயது மகாதீர் அவ்வாறு கூறினார்.
2017-ஆம் ஆண்டு சிலாங்கூர், கிளானா ஜெயாவில் நடைபெற்ற அம்னோ தொகுதிக் கூட்டத்தின் போது, சாஹிட் தம்மை ‘குட்டி’ என அழைத்ததாக் கூறி, அவர் மீது மகாதீர் வழக்குத் தொடுத்துள்ளார்.
சாஹிட்டின் அப்பேச்சு மக்களிடம் எடுபடாது என்றே நான் நினைத்தேன்; ஆனால் 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நிலைமை மாறி, மக்களிடம் நான் செல்வாக்கை இழப்பேன் என எதிர்பார்க்கவில்லை என மகாதீர் சொன்னார்.
சாஹிட் கூறியது போல் நான் எந்த காலத்திலும் ‘மகாதீர் தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டி’ என்ற பெயரைப் பயன்படுத்தியதே இல்லை.
முதலில், அது என் பெயரே அல்ல; என் பெயர் ‘மகாதீர் மொஹமட்’ மட்டுமே. அப்படியிருக்க இஸ்கண்டார் குட்டி என்ற பெயரில் எனக்கு எப்படி அடையாள அட்டை இருந்திருக்கும் என மகாதீர் கேள்வி எழுப்பினார்.