
கின்றாரா, மார்ச்-8 – சிலாங்கூர், பூச்சோங், கின்றாராவில் உள்ள ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தற்காலிக ஏற்பாடாக நீர் விநியோகம் கிடைத்துள்ளது.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கொடுத்த ஆலோசனையின் பலனாக இந்தத் தற்காலிகத் தீர்வுக் கிடைத்ததாக ஆலய நிர்வாகத்தினர் கூறினர்.
கோபிந்த் சிங் ஆலோசனையின் பேரில், கின்றாரா தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியை விமலா மற்றும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் கோபி ஆகியோருடன் ஆலய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன் போது, ஆலயம் எதிர்நோக்கும் பிரச்னையை நன்கு புரிந்துகொண்ட தலைமையாசிரியையும் மேலாளர் வாரியத் தலைவரும் ஆலயத்திற்கு உதவ ஒப்புக் கொண்டனர்.
அவ்வகையில், சக்தி நாகேஸ்வரி ஆலய தண்ணீர் பிரச்னைக்கு ஒரு நீண்ட கால தீர்வு எட்டப்படும் வரை, தற்காலிகமாக கின்றாரா தமிழ்ப் பள்ளியிலிருந்து ஆலயத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
சமூகத்தின் பால் அக்கறைக் கொண்ட திருமதி விமலா மற்றும் திரு கோபியின் பரந்த மனது பாராட்டப்பட வேண்டியதுடன் மற்றவர்களால் பின்பற்றப்படவும் வேண்டிய ஒன்றாகும்.
பரிவுமிக்க அவர்களின் இவ்வுதவிக்கு மனதார நன்றித் தெரிவித்துக் கொள்வதாக ஆலய நிர்வாகம் நெகிழ்ச்சியுடன் கூறியது.
கின்றாரா தமிழ்ப் பள்ளியின் பின்னாலிருக்கும் பழைய இரும்பு சாமான் விற்கும் தளத்தைச் சுத்தம் செய்யும் பணிகள் காரணமாக கோயிலுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாததால் தெய்வச் சிலைகளுக்கான அபிஷேகம், மக்களுக்கான உணவு விநியோகம் மற்றும் கோயில் பராமரிப்பு பணிகள் போன்ற தினசரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, கோயில் நிலப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, தற்காலிக நீர் விநியோகத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை கோபிந்த் சிங் செய்ய வேண்டுமென ஆலய நிர்வாகம் முன்னதாகக் கேட்டுக் கொண்டிருந்தது.