
கோலாலம்பூர், அக்டோபர்-17,
பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் இரண்டாம் படிவ மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது மாணவியின் தாய், தனது மகளின் கொலையைச் சுற்றியுள்ள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வேதனையோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது மகள் Yap Shing Xuen 50 முறை மட்டுமே கத்தியால் குத்தப்பட்டதாகவும் அப்பெண்ணின் மாமா தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகவும் இணையத்தில் பரவியுள்ள தகவல்கள் பொய்யானவை என்று, Wong Lee Ping கூறினார்.
மகள் 200 முறைக்கு மேல் கத்திக் குத்துக்கு ஆளானதாக போலீஸே தங்களிடம் தெரிவித்ததாக அவர் சொன்னார்.
“கொலையாளி பெண்கள் கழிப்பறை உள்ளே நுழைந்த போது, என் மகள் அறையொன்றினுள் பூட்டிக் கொண்டாள்; அவனோ அறையின் மீதேறி குதித்து, மகளைத் தாக்கினான்” என போலீஸ் தகவலை Lee Ping மேற்கோள் காட்டினார்.
அந்த 14 வயது மாணவனுடன் தன் மகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவனை ஒருபோதும் சந்தித்ததில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
“மகளை ஏற்கனவே பறிகொடுத்து விட்டோம்; அந்த வலி வேதனைக்கு மத்தியில் வதந்திகளையும் போலிக் கதைகளையும் பரப்பி மேலும் மேலும் காயப்படுத்தாதீர்கள்” என அவர் வேண்டினார்.
தனது மகளுக்கு நடந்தது போன்று இனியும் நடக்காது என்றும், பள்ளி வன்முறையின் கடைசி பலியாக அவள் இருப்பாள் என்றும் நம்புவதாக Lee Ping குறிப்பிட்டார்.
இவ்வேளையில், மோசடி செய்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் தனது மகளின் இரங்கல் செய்தியில், QR குறியீடு மூலம் நன்கொடைகளை வழங்குவதை நிறுத்துமாறும் Lee Ping பொது மக்களை நினைவுறுத்தினார்.



