
கோலாலம்பூர், ஜனவரி-26 – நாட்டில் டத்தோ பட்டம் கொண்ட ‘பணக்கார’ பாடகர்கள் உள்ளிட்ட 50 பிரபலங்கள் இன்னமும் திவால் நிலையிலேயே உள்ளனர்.
திவாலானதாக அறிவிக்கப்பட்டதும் மாதா மாதம் செலுத்த வேண்டிய தவணைப் பணத்தையும் அவர்களில் சிலர் செலுத்துவதில்லை என, தேசிய திவால் துறை அம்பலப்படுத்தியுள்ளது.
திவால் நோட்டீஸ் வெளியிடப்பட்டு நீண்ட நாட்கள் ஆன போதும், அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
இதனால் திவால் நிலையிலிருந்து அவர்கள் விடுபட தங்களால் உதவ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக, அத்துறையின் இயக்குநர் டத்தோ எம். பக்ரி அப்துல் மஜிட் (Datuk M Bakri Abd Majid) கூறினார்.
திவாலான பிரபலங்கள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை சமூக ஊடகங்களில் காட்டிக் கொள்வதை மறப்பதில்லை; ஆனால் மாதா மாதம் செலுத்த வேண்டியத் தொகை சிறியதே என்றாலும் அதை அவர்கள் ‘மறந்து’ விடுகின்றனர்.
சிலர் ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் திவால் நிலையிலேயே இருக்கின்றனர்; உரிய ஒத்துழைப்பு வழங்கி தவணைப் பணத்தைச் செலுத்தியிருந்தால் எப்போதோ அவர்கள் விடுபட்டிருக்கலாம் என டத்தோ பக்ரி சொன்னார்.
திவாலான பிரபலங்களில் 2 மூத்த rock இசைப் பாடகர்களும் , சில நடிகர்-நடிகைகளும் அடங்குவர் என்றார் அவர்.