
கோலாலம்பூர், அக்டோபர்-3 – பல்வேறு விருதுகளைக் குவித்த மலேசிய வெற்றித் திரைப்படமான ‘ஜகாட்’, தனது 10-ஆம் ஆண்டு நினைவாக இன்று அக்டோபர் 3-ஆம் தேதி நாடு முழுவதும் 26 திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.
முதன் முறையாக சபா-சரவாக் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இது திரைக்கு வருகிறது.
2015-ல் வெளியான இப்படம், கடந்த 10 ஆண்டுகளில் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தையும் அவர்களின் பேராதரவையும் பறைசாற்றும் வகையில் இந்த மறுவெளியீடு அமைகிறது.
இப்படத்தின் இயக்குநர் சன்-ஜே பெருமாள் (Sun-J), ‘Jagat Multiverse’ எனும் புதிய தொடரையும் அறிவித்துள்ளார்.
இதில் Macai வரும் நவம்பர் 13-ஆம் தேதியும் Blues டிசம்பர் 4-ஆம் தேதியும் என இரண்டு புதிய படங்கள் வெளியாகவுள்ளன.
“ஜகாட் ….எளிய மலேசியர்களின் வாழ்க்கை போராட்டங்களையும் கனவுகளையும் சொல்கிறது; பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் உண்மைகள் இன்று பொருத்தமானவையாகவே உள்ளன” என்று Sun-J கூறினார்.
இந்த மறுவெளியீடு, விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த படத்தை மீண்டும் பெரிய திரையில் காண புதிய பார்வையாளர்களுக்கும், பழைய இரசிகர்களுக்கும்,
வாய்ப்பாக இருக்கும்.