
ஹனோய் – மே-27 – ‘நாட்டுக்கே அரசன் என்றாலும் வீட்டுக்கு புருஷன் தானே’ என ஒரு பழமொழி உண்டு.
அதை மெய்ப்பிக்கும் வகையில் நடந்துள்ள ஒரு சம்பவம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், பொது வெளியில் தனது மனைவியிடம் அறை வாங்கிய சம்பவமே அது…
தென்கிழக்காசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மக்ரோனும் அவரின் 72 வயது மனைவி பிரிஜிட்டும் நேற்று முன்தினம் வியட்நாம் சென்றடைந்தனர்.இந்நிலையில் தலைநகர் ஹனோயில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, மக்ரோன் முகத்தில் மனைவி அறைவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விமானத்தின் கதவு திறக்கப்படுவதை உணராமலிருந்த மக்ரோனை, கதவின் பின்னாலிருந்த மனைவி தனது கையால் முகத்தைத் தள்ளுகிறார்; இதனால் நிலைத் தடுமாறிய மக்ரோன் சட்டென சுதாகரித்துக் கொண்டு, வரவேற்க வந்தவர்களை நோக்கி கையசைத்தார். சற்று நேரத்தில் இருவரும் ஜோடியாக படிகட்டில் இறங்கி வந்தனர்.
அப்போது கைகளைக் கோர்த்து செல்வதற்காக மக்ரோன் கை நீட்டிய போது, அதைப் பொருட்படுத்தாமல் மனைவி நடந்துசென்றதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மக்ரோனை விட அவரின் மனைவி 25 வயது மூத்தவர் என்பவர் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் அவ்வீடியோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்ரோன், கணவன் மனைவிக்கிடையில் நடந்த சாதாரண கேலியும் கிண்டலும் சர்ச்சையாக்கப்பட்டு பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுவதாகக் கூறி சமாளித்தார்.
உண்மையில் நீண்ட தூர பயணம் தொடர்பிலேயே அத்தம்பதி விமானத்தினுள் சண்டையிட்டுக் கொண்டதாக அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.