
சுங்கை பட்டாணி,ஜூலை-13- எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்று தினம் தினம் நொந்துக் கொள்கின்றனர் சிலர். வெற்றி பாதைகள் இலகுவாய் இருந்தபோதும், தமக்கு தாமே தடைக்கற்களை போட்டு கொள்கின்றனர் இன்னும் சிலர்.ஆனால் ‘Muscular dystrophy’ எனும் அறிய வகை நோயால் பாதிப்புற்று ‘Aimst’ பல்கலைக்கழகத்தில் பயின்று, இவ்வாண்டு Management Information Systems துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் கெடா சுங்கை பட்டாணி, தாமான் செஜாதி இண்டாவைச் சேர்ந்த தேவா சுரேந்திரா சில்வாரம்..
கை கால்கள் இல்லையென்றால்தான் கவலையுற வேண்டும். பலம்தானே குறைவு; இது ஒரு தடையா? இல்லை என்கிறார் இவர்.15வது வயதில்தான் தனக்கு இந்நோய் இருப்பதே கண்டறிந்துள்ளார் சுரேந்திரா.
நாட்கள் கடக்க கடக்க தசையின் வலிமை குறைந்து இவரால் மற்றவர்களைப் போல இயல்பாக நடமாட இயலவில்லை. அருகாமையிலுள்ள இடங்களுக்கு மட்டுமே நடந்து செல்ல முடிந்தது இவரால்.பெற்றோரின் ஊக்கம் சுரேந்திரனுக்கு பக்கபலம்.
இந்நிலையில்தான், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயில வாய்ப்பு கிட்டியுள்ளது இவருக்கு. ஒரே வகுப்பில் பல மாணவர்கள் இருக்க, ஒருவருக்கு மட்டும் சிறப்பு சலுகை என்றால் முடியுமா?
கல்வி வழி சமுதாய உருமாற்றத்தை ஏற்படுத்துவது எனும் இலக்கை அடைய தங்களுடைய மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், இவரை மட்டும் விட்டுவிடுமா என்ன… இவருக்கும் தேவையானவற்றை செய்து தந்தது பல்கலைக்கழக நிர்வாகம்.
வகுப்பறைக்கு அருகிலேயே, தன்னுடைய வாகனத்தை நிறுத்த தனி இடத்தை ஒதுக்கி தருவது முதல், பரிவு மற்றும் அக்கறைக் கொண்ட விரிவுரையாளர்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன இவருக்கு..
பெற்றோரின் பேராதரவிற்கு அடுத்து, AIMST பல்கலைகழகத்தின் ஒத்துழைப்பிற்கும் புரிந்துணர்விற்கும் தான் எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது என்கின்றார் தேவ சுரேந்திரா.
கல்வி கற்ற சமுதாயமே யாரையும் சார்ந்திராமல் சுயகாலில் நிற்கும் சமுதாயமாக உருமாற முடியும்.அதற்கு உடற்சார்ந்த பிரச்சனைகளோ நோய்களோ ஒரு தடையல்ல.
அதனை முன்னிறுத்தி இப்படிபட்ட பிரச்ச்னைகளை கொண்டுள்ள மாணவர்களுக்கும் என்றுமே முன்னுரிமை கொடுத்து கல்வி வாய்ப்புகளை கொடுத்து வருகிறது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்.
அவ்வகையில் பட்டதாரி சுரேந்திரனுக்கும் அவரை அந்நிலைக்கு உயர்த்த துணைபுரிந்த AIMST பல்கலைக்கழகத்திற்கும் நமது வாழ்த்துகள்