
கிள்ளான், ஆகஸ்ட்-9- நாட்டிலுள்ள இந்திய DJ-க்களுக்கு 3 மாத கால பயிற்சிகள் வழங்கிய DJ Mani Boy, நேற்று அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவை நடத்தினார்.
கிள்ளான் Grand City Hall மண்டபத்தில் நடைபெற்ற அவ்விழாவுக்கு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தலைமைத் தாங்கினார்.
உள்ளூர் DJ-களின் திறமைகளைப் பாராட்டிய குணராஜ், இது போன்ற பயிற்சிகள் அவர்களை மேலும் செம்மைப்படுத்துமென நம்பிக்கைத் தெரிவித்தார்.
குணராஜின் ஆதரவுக்கு நன்றித் தெரிவித்த DJ Mani Boy, இதுபோன்ற ஆதரவு தொடர வேண்டுமென்றார்.
DJ தொழில் ஒன்றும் சிலர் நினைப்பது போல் கெட்ட வேலையல்ல; தீவிரமாக இறங்கினால் நல்ல வருமானத்தைக் கொண்டு வரும் தொழிலாகும்.
எனவே, ஏராளமான இளைஞர்களை இந்த DJ இசைத்துறையில் ஈடுபடுத்த தாம் ஆர்வம் கொண்டுள்ளதாக Mani Boy சொன்னார்.
உள்ளூர் DJ-களுக்கு அங்கீகாரம் கொடுக்க இதுவரை யாரும் விழா எடுக்கவில்லை என்றும் அவர் குறைப்பட்டுக் கொண்டார்.
பயிற்சி முடித்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட DJ-கள் சிலர், முதன் முறையாக தங்களுக்கு இது போன்ற அங்கீகாரம் கிடைத்தது குறித்து வணக்கம் மலேசியாவுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
DJ என்பது ஏதோ ஒரு தவறான தொழில் என்ற கண்ணோட்டத்தையும் அவர்கள் மறுத்தனர். இளம் DJ-க்களுக்கு முன்னோடியாகத் திகழும் மூத்த இந்திய DJ-க்களும் நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.
திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், ஒன்றுகூடல்கள் போன்ற நிகழ்வுகளை மெருகூட்டுவதில் DJ இசைக்கு பெரும் பங்குண்டு.
ஆனால் அவர்கள் அவ்வளவாக கண்டுகொள்ளப்படுவதில்லை. இந்நிலையில், அவர்களுக்கும் முறையான பயிற்சிகளை வழங்கி, தொழிலின் மதிப்பை உயர்த்தும் ஒரு நல்ல முயற்சியாக இந்த DJ பயிற்சித் திட்டம் விளங்குகிறது.