
பெந்தோங், ஏப்ரல்-28, கோலாலம்பூர்-காராக் விரைவுச்சாலையின் 43-ஆவது கிலோ மீட்டரில் உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களில் சென்ற மூன்று ஓட்டுநர்கள், கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தனர்.
நேற்று காலை 9.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் விபத்து ஏற்பட்டது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவரின் ஹெல்மெட் கேமராவில் பதிவான காட்சிகளில், சாலையோர வளைவை நோக்கிச் செல்லும்போது, முன்னால் சென்றவரின் மோட்டார் சைக்கிள் கீழே விழுவதைக் காண முடிந்தது.
உடனடியாக அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது, இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் விழுந்து, சாலைத் தடுப்பில் மோதினார்.
சிறிது நேரம் கழித்து, மூன்றாவது மோட்டார் சைக்கிளோட்டிக்கும் அதே கதி ஏற்பட்டது.
காயமடைந்த அம்மூவரில் ஒருவரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது;
வாக்குமூலம் பெறுவதற்காக மேலுமிருவரை அடையாளம் கண்டு வருவதாக பெந்தோங் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் சைஹாம் மொஹமட் கஹார் கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் முன் வந்து விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்