
கோலாலம்பூர், பிப்ரவரி-23 – மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் தலைமைத்துவ மற்றும் நிர்வாகப் பயிற்சி கோலாலம்பூரிலுள்ள IKP கழகத்தில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்பயிற்சியினைத் தேசிய அகாடமி கழகத்தின் சிறப்பு அதிகாரி Mohd Ariff Samson அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
நாடு தழுவிய அளவில் 100-க்கும் மேற்பட்ட மணிமன்றத் தலைவர்களும் பொறுப்பாளர்களும் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மணிமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவத் திறனை மேம்படுத்துதல், முடிவெடுக்கும் திறனை வளர்த்தல், திறமையான நிர்வாக ஆற்றலைக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவை இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும் என, பேரவையின் தேசியத் தலைவர் முருகன் மணியம் தெரிவித்தார்.
இப்பயிற்சியில் தலைமைத்துவப் பண்புகள், மணிமன்ற வரலாறு, நிர்வாக அமைப்பு முறைகள், MYKD மேலாண்மை, இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் களையும் உத்திகள் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டன.
சமூக மாற்றங்களை நிகழ்த்தும் வகையில் இளைஞர்கள் தங்களைத் தயார்செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணக்கருவோடு, பல புதிய உத்திகள் மற்றும் செயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
எதிர்காலத் தலைவர்களாக உருவாக இளம் தலைமுறைக்கு இதுபோன்ற பயிற்சிகள் அவசியம் முருகன் மணியம் மேலும் கூறினார்.