
சிரம்பான், அக்டோபர்-4,
இரண்டாம் வகுப்பு மாணவனான 8 வயது வி. வசந்த் அபினந்தன், தனது தனித்துவமான சாதனையால் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
10 நிமிடங்கள் தொடர்ந்து ஆணிகள் பொருத்தப்பட்ட செருப்புகளை அணிந்தவாறு, கராத்தே கத்தா (Karate Kata) பயிற்சிகளை செய்துள்ளதே அவரின் சாதனையாகும்.
இது “ஆணி மேல் கராத்தே கத்தா செய்த முதல் சிறுவன்” என அங்கீகரிக்கப்பட்டது.
அந்த யோசனை முழுக்க-முழுக்க மகனிடமிருந்தே வந்ததாக, வசந்தின் தந்தை கே. வசந்தா கூறினார்.
3 வயதிலிருந்தே கராத்தே கற்றுவரும் வசந்த், இந்த சவாலான ‘ஆணி’ காலணியில் ஒரு வருடம் பயிற்சி எடுத்துள்ளார்.
வசந்த், ஏற்கனவே 2025-ஆம் ஆண்டில், ஒற்றைக் காலில் நீண்ட நேரம் நின்ற சிறுவன் என யோகா ஆசியா உலக சாதனையைப் படைத்துள்ளார்.
அவர் கடந்தாண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற அனைத்துலக போட்டியில் வெற்றி பெற்று, 2024 விளையாட்டு சாதனையாளர் விருதையும் வென்றார்.
தற்போது நீல பட்டையை (Blue Belt) வைத்துள்ள வசந்த்துக்கு, விரைவில் கருப்பு பட்டையைப் பெறுவதும் குறிக்கோளாகும்.
எதிர்காலத்தில் மலேசியாவை பிரதிநிதித்து தேசிய விளையாட்டு வீரராக உயர வேண்டும் என்பதே சிறுவன் வசந்தின் கனவாகும்.