
கோலாலம்பூர், மே-31 – கோடிகளிள் புரள்வது என்பது பலருக்கு வாழ்நாள் முழுவதும் உள்ள இலக்காகும்.
ஆனால் ஒரு சிலருக்கே பெரும் செல்வத்தில் பிறக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது.
இதனால் இளம் வயதிலேயே பில்லியன்களை மரபுரிமையாகப் அவர்கள் பெறுகிறார்கள்.
அவ்வகையில் பிரபல Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ள, 2025-ஆம் ஆண்டுக்கான உலகின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியல் நம்மை வாய்ப் பிளக்க வைக்கிறது.
வெறும் 19 வயதில் ஜெர்மனியைச் சேர்ந்த Johannes von Baumbach என்பவர் 5.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதில் முதலிடத்தில் உள்ளார்.
அவ்விளைஞர், மருந்தகத் துறையில் கோலோச்சும் பெரும் செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர்.
முறையே 23, 25, 27 வயதிலான இவரின் மூத்த உடன் பிறப்புகளும் தலா 5.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த Lívia Voigt de Assis உள்ளார்.
20 வயதில் இவர் பெயரில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு 1.2 பில்லியன் டாலராகும்.
அவரின் தாத்தா உருவாக்கிய மின்னியல் மோட்டார் சைக்கிள் நிறுவனமே லத்தின் அமெரிக்காவின் மிகப் பெரிய உற்பத்தி நிறுவனமாகும்.
உலகின் மிகப்பெரிய மூக்குக் கண்ணாடி நிறுவனத்தைச் சேர்ந்த 20 வயது Clemente Del Vecchio, 6.6 பில்லியன் டாலருடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
முதல் 10 இடங்களில் தென் கொரிய கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இடம்பெற்றுள்ளனர்.
கொரியாவின் மிகப் பெரும் இணைய விளையாட்டு நிறுவனத்தின் தோற்றுநரான மறைந்த Kim Jung-ju-வின் கடைசி மகளான Kim Jung-youn, 21 வயதில் 1.3 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாக உள்ளார்.
அவரின் 23 வயது சகோதரி Kim Jung-min, 5.6 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரர் ஆவார்.