Latestமலேசியா

இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை – டாக்டர் ராமசாமி

கோலாலம்பூர், பிப் 2 – பொருளாதார மற்றும் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் இந்திய சமூகத்தினர் இருக்கின்றனரே தவிர துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறுவது போல் இந்தியர்கள் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள தவறவிடுகின்றனர் என்பதல்ல என பினாங்கு முன்னாள் துணை முதலவர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார்.

சரஸ்வதி கூறுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல என அவர் சாடியுள்ளார்.
இந்தியர்களுக்கு கிடைக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் என்னவென்பதையும் அவர்கள் ஏன் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை சரஸ்வதி தெளிவாக கூறவேண்டும்.

இந்தியர்கள் தங்கள் இன தகுதியின் அடிப்படையில் உரிமம் மற்றும் பெர்மிட் பெறுவதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் , அரசாங்க வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள அவர்கள் இயலாமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும் .

மெட்ரிகுலேஷன் படிப்பில் சேரும் மாணவர்களில் 90 சதவிகிதம் மலாய்க்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால், இந்தியர்கள் கல்வித் துறையில் வாய்ப்புகளைப் பெற முடிவதில்லை. பொதுப் பல்கலைக்கழகங்கள் மலாய் மாணவர்களில் 80 சதவீதத்தை எடுத்துக் கொண்டால், இந்தியர்களும் சீனர்களும் கல்வி வாய்ப்புகளைப் பெற முடிவதில்லை. இந்தியர்களுக்கு இனத்தின் அடிப்படையில் அவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் நிதி உதவிகள் மறுக்கப்படுகிறது. இதுகூட இந்தியர்கள் வழங்கப்பட்ட வாய்ப்பை தவறவிட்ட கதை என்று சொல்லமுடியுமா? இந்நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் சீனர்களும் இந்தியர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை அனுபவிப்பதற்கு பதிலாக அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற மேலும் பல உதாரணங்களை தாம் கூற முடியும் என்றார் ராமசாமி.

வாய்ப்புக்கள் ஒதுக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதற்கும் உள்ளஅர்த்தத்தை துணையமைச்சர் புரிந்துகொள்ள தவறிவிட்டார். இந்த இரண்டையும் ஒன்று படுத்துவது நியாயம் அல்ல என்பதோடு அவ்வாறு செய்வது இந்திய சமூகத்தை அவமதிப்பதற்கு ஒப்பாகும். நாட்டிற்காக இந்திய சமூகம் அதிகம் தியாகம் செய்துள்ளது. ஆனால் வாய்ப்புக்களின் அடிப்படையில் அற்பமாகப் பார்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை என டாக்டர் ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!