
சிரம்பான், ஏப்ரல்-15, சிரம்பானில் 2 மில்லியன் பிணைப் பணம் கேட்டு16 வயது பெண் பிள்ளை கடத்தப்பட்டது தொடர்பில் கைதான 6 சந்தேக நபர்களின் தடுப்புக் காவல், 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 முதல் 31 வயதிலான அவர்கள் ஏப்ரல் 27 வரை தடுத்து வைத்து விசாரிக்கப்படுவர் என, நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மட் ட்சாவிர் மொஹமட் யூசோஃப் (Datuk Ahmad Dzaffir Mohd Yussof) தெரிவித்தார்.
எனினும், அவ்வழக்கை தற்போது புக்கிட் அமான் போலீஸ் கையிலெடுத்திருப்பதால், அது குறித்து மேற்கொண்டு கருத்துரைக்க அவர் மறுத்து விட்டார்.
சந்தேக நபர்களில் ஒருவர் முன்னதாக சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் நேற்று காலை சுட்டுக் கொல்லபட்டதும் குறிப்பிடத்தக்கது.
21 வயது அந்நபர், போலீஸார் நிறுத்தச் சொல்லியும் கேட்காமல், எதிர் திசையில் வாகனமோட்டி, போலீஸ் வாகனத்தையும் மோதி தப்பிக்க முயன்றதாக, புக்கிட் அமான் போலீஸ் கூறியது.
ஏப்ரல் 10-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில், கடத்தல் கும்பல் கேட்ட பணத்தில், 280,000 ரிங்கிட் ரொக்கமும், நகைகளும் கொடுக்கப்பட்டிருந்தன.
அவை அனைத்தும் திரும்பக் கிடைத்திருப்பதாகவும் போலீஸ் கூறியது.
கடத்தப்பட்ட பெண் ஏப்ரல் 11-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் செண்டாயானில் பெயர் வெளியிடப்படாத இடத்தில் கடத்தல்காரர்களால் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டார்.