Latestமலேசியா

ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் பாலியல் தொல்லை ? குழு அமைத்து KKM விசாரணை

ஈப்போ, மார்ச் 17 – ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார், முழுமையாக விசாரிக்கப்படும் என சுகாதார அமைச்சு உத்தரவாதமளித்துள்ளது.

புகார் கிடைக்கப்பெற்ற மறுநாளான பிப்ரவரி 29-ஆம் தேதியே சிறப்பு சுயேட்சை விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாக பேராக் சுகாதார இயக்குனர் Dr Feisul Idzwan Mustapha கூறினார்.

விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

பிப்ரவரி 28-ஆம் தேதி தபால் மூலம் வந்த ஒரு மொட்டைக் கடிதத்தில் அந்தப் பாலியல் தொல்லைக் குறித்த புகார் இடம் பெற்றிருந்தது.

ஆண் மருத்துவர் ஒருவர், அங்குள்ள பெண் பயிற்சி மருத்துவர்கள் சிலரிடம் ஆபாசமாகப் பேசியதோடு பாலியல் ரீதியில் தொல்லைக் கொடுத்ததாக அந்த மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டது.

நீண்ட காலமாகவே அவரின் ஆபாச சேட்டைகள் தொடர்ந்தாலும், அதனைப் அப்பெண்கள் வெளியில் சொல்லவில்லை.

வெளியில் தெரிந்தால் பயிற்சி நீட்டிக்கப்படும் என்பதோடு, பிரச்னைக்குரிய பயிற்சி மருத்துவர்கள் என முத்திரைக் குத்தப்படும் என்றும் அம்மருத்துவர் அவர்களை மிரட்டியதாக அக்கடிதம் மேலும் கூறியது.

இந்நிலையில் அத்தொல்லையில் இருந்து எப்படியாவது தப்பிக்கும் முயற்சியில் அவர்கள் அந்த மொட்டைக் கடிதம் வாயிலாக தங்களுக்கு நேர்ந்த அவலத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இணையத்தில் வைரலான அப்புகாரை தமது தரப்பு கடுமையாகக் கருதுவதாகக் கூறிய Dr Feizul, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பணியிடங்களில் பாலியல் தொல்லைச் சம்பவங்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!