
குவாந்தான் – ஜூலை-3 -இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 250 கிலோ கிராம் எடையிலான ஒரு ‘ஏரியல்’ வெடிகுண்டு, பஹாங், குவாந்தானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Bukit Goh-வில் வீடமைப்புத் திட்டக் கட்டுமானத் தளத்தில் புதையுண்ட நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கட்டுமானப் பணியாளர் ஒருவரால் அது கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து வெடிகுண்டு ஒழிப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு சேதாரம் வராத வண்ணம், low order அதாவது குறைந்தத் தாக்க முறையில் அவ்வெடிகுண்டு அழிக்கப்பட்டது.
‘ஏரியல்’ வெடிகுண்டுகள் வான் தாக்குதல்களின் போது குறிப்பிட்ட பகுதியில் வெடித்துச் சிதறி, பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தும் ஒரு பயங்கரமான ஆயுதமாகும்.
இந்நிலையில், சந்தேகத்திற்குரியப் பொருட்களைக் கண்டால், அவற்றை தொட வேண்டாம் என்றும், மாறாக உடனடியாக போலீஸை தொடர்புகொள்ளுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.