
பணஜி, மே-4- இந்தியாவின் கோவா மாநில கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிந்தனர்.
70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்களில் பலரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
தலைநகர் பணஜியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீ லைரை தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது.
6 நாட்கள் களைக்கட்டும் பாரம்பரியமிக்க இத்திருவிழாவைக் காண்பதற்காக கோவா மட்டுமின்றி பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்தும் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குவிந்திருந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு தீமிதி விழா தொடங்கிய போது, திடீரென கூட்டம் அதிகரித்தது.
தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் கீழே விழுந்து ஒருவரை ஒருவர் மிதித்ததால் அவ்விடமே கலவரமானது.
அதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் கூட்டத்திலிருந்தவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு ஓட முயன்றதால், இச்சம்பவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் உண்மைக் காரணத்தைக் கண்டறிய மாநில அரசு உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.